Wednesday, October 15, 2025
No menu items!
HomeSri Lanka News"தமிழ் தேசியம் விலை போகாமல் பாதுகாத்த பெருந்தலைவர் சம்பந்தன்!”

“தமிழ் தேசியம் விலை போகாமல் பாதுகாத்த பெருந்தலைவர் சம்பந்தன்!”

தமிழ் தேசிய அரசியலை கெடுபிடிகளுக்குள்ளிருந்து பாதுகாத்து, சர்வதேசமயப்படுத்திய மிகச்சிறந்த மிதவாத தலைவர் சம்பந்தன் ஐயா என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

சம்பந்தன் ஐயாவின் மறைவையிட்டு அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“விடுதலை அரசியலில் சிறுபான்மைச் சமூகங்களை சம பார்வையுடன் நோக்கிய தலைவர் சம்பந்தன் ஐயா. நீண்ட அரசியல் வரலாற்றனுபவமுள்ள இவர், தமிழ் தேசிய அரசியலை மிக சாதுர்யமாக வழிநடத்தினார்.

ஜனநாயகத்தின் மீது அவருக்கிருந்த நம்பிக்கையால், கெடுபிடியான காலங்களில்கூட தமிழ்த்தேசிய அரசியல் விலை போகாமல் பாதுகாக்கப்பட்டது. தொண்ணூறு வயதைக் கடந்திருந்தாலும் தீர்வைப் பெற வேண்டும் என்ற திடகாத்திரம் அவருக்கிருந்தது.

ஒரே வாழிடத்தில் ஒரே மொழி பேசுவோராக வாழ்ந்த சிறுபான்மைச் சமூகங்களை, சம பார்வையில் நோக்கிய பெருந்தகையும் இவர்தான். தமிழ், முஸ்லிம் முரண்பாடுகள் ஒரு மொழித் தேசியத்தை (தமிழ்) சிதைக்கக் கூடாது என்பதற்காக முஸ்லிம் தலைமைகளுடன் நல்லுறவை பேணி வந்தார். 

இன்று வரைக்கும் தீர்க்கப்படாதுள்ள தமிழ், முஸ்லிம் அபிப்பிராய பேதங்களைப் போக்குவதற்கு சம்பந்தன் போன்ற தலைமைகளே அவசியம். 

காலம் சென்ற சம்பந்தன் ஐயாவின் கடந்தகால வரலாறுகளிலிருந்து ஒற்றுமைக்கான பல படிப்பினைகளை நான் காண்கிறேன். 

அவரது வழி காட்டல்களில் சமாதானத்துக்கான கதவுகள் திறந்தே இருந்தன. உரிமை அரசியல் விலை போகக் கூடாது என்பதற்காக தனக்கு வந்த அரிய பல வாய்ப்புக்களையும் அவர் தியாகம் செய்திருந்தார்.

இனிவரும் காலங்களில் தென்னிலங்கை அரசியலில் ஏற்படப் போகும் மாற்றங்கள் மற்றும் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு தீட்சண்யமான தலைமை தமிழருக்கு அவசியம். 

இந்தத் தலைமைகளுடன் தான் முஸ்லிம் தலைமைகளும் இணக்கப்பாட்டுக்கு வர முடியும். 

அன்னாரின் இழப்பால் துயருறும் சகலருக்கும் ஆண்டவனின் அருட்கடாட்சம் கிடைக்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments