Wednesday, October 15, 2025
No menu items!
HomeMannar Newsமாந்தை மேற்கு விவசாயிகளால் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

மாந்தை மேற்கு விவசாயிகளால் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

மன்னார் மாவட்ட சிறு போக நெற்செய்கைக்கான புலவுகளை தெரிவு செய்வதில் அதிகாரிகளின் தனிப்பட்ட பழி வாங்களை கண்டித்து இன்றைய தினம் திங்கட்கிழமை (13) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான சிறு போக செய்கைக்காக நெடுங் கண்டல் புலவை திறந்து தருமாறு  கோரி   மாந்தை மேற்கு விவசாயிகள்  குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மன்னார் மாவட்டச் செயலகத்தின் நுழைவாயிலை முற்றுகையிட்டு,பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அதிகாரிகளின் தனிப்பட்ட பழிவாங்கல் களுக்கு இடம் கொடுக்காதீர்கள்,திறந்து விடு திறந்து விடு நெடுங் கண்டல் புலவை திறந்து விடு,கொல்லாதே கொல்லாதே விவசாயிகளை கொள்ளாதே உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்ட மாந்தை மேற்கு விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில்,,,

மன்னார் மாவட்டத்தில் சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்ட காலம் தொட்டு இன்று வரை ஒரு போதும் நெடுங்கண்டல் புலவு பூட்டப் படவில்லை.

1974 ஆம் ஆண்டு நீர் தட்டுப்பாடு வந்த போது காலபோகத்தில் செய்கை பண்ணப்படும் 40 ஏக்கருக்கு சிறுபோகத்தில் 1 ஏக்கர் என்ற தீர்மானத்தில் 40:1 என்ற விகிதத்தில் விவசாயம் செய்யப்பட்ட போது சின்ன உடைப்பு துலுசின் கீழ் உள்ள புலவுகள் மாத்திரம் திறக்கப்பட்டது.

இதில் நெடுங்கண்டல் புலவு முதன்மையானதாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட நீர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து புலவுகளும் பூட்டப்பட்டு மன்னார் மாவட்ட விவசாயிகள் விதை நெல் தேவைக்காக நெடுங்கண்டல் புலவு மாத்திரம் திறந்து விவசாயம் செய்யப்பட்டது.

இம்முறை எமது நெடுங்கண்டல் புலவு இம்முறை பூட்டப் பட்டதற்கான காரணத்தை தனிப்பட்ட முறையில் எமது கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள் உரிய அதிகாரிகளை சந்தித்து வினவிய போது 2023 ஆம் ஆண்டின் புலவு பங்கீட்டில் தனிப்பட்ட நபர் ஒருவருடனான முரண்பாட்டிற்கு பழி தீர்க்கும் வகையில் இம்முறை எமது புலவு பூட்டப்பட்டுள்ளது என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொண்டுள்ளோம்.

குறித்த விஷயத்திற்காக நாம் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மன்னிப்புக் கோரினோம்.உரிய அதிகாரிகளை நேரில் சந்தித்து மிகத் தெளிவாக விளக்கியிருந்தோம்.சாதக பாதக நிலையை தெளிவு படுத்தி எமது புலவை திறந்து தரும் படி பணிவாக வேண்டினோம்.

எனினும் ஏழை விவசாயிகளாகிய நாங்கள் வஞ்சிக்கப்பட்டோம்.இதன் அடிப்படையிலேயே எமது உரிமைகளை பெற்றுக் கொள்ள போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இன்றைய தினம் திங்கட்கிழமை(13) காலை மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்று கூடி போராட்டத்தை முன்னெடுத்தோம்.

2024 ஆம் ஆண்டுக்கான சிறு போக செய்கைக்காக நெடுங்கண்டல் புலவை திறந்து தருமாறு விவசாயிகள் சார்பாக கோரிக்கை முன் வைக்கின்றோம் என போராட்டத்தில் ஈடுபட்ட மாந்தை மேற்கு விவசாயிகள் தெரிவித்தனர்.

தமது கோரிக்கை அடங்கிய மகஜர் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம்  கையளிக்கப்பட்டது.

இதன் போது விவசாயிகள் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ்,ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளர் லுஸ்ரின் மோகன் ராஜ்,மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் முஜாகிர் உற்பட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments