Thursday, October 16, 2025
No menu items!
HomeMannar NewsMannar DS Newsஇந்த மண்ணிலே நாம் பல உயிர்களை தியாகம் செய்திருந்தும்  நாம் இன்னொரு சுதந்திரமான காற்றை சுவாசிக்க...

இந்த மண்ணிலே நாம் பல உயிர்களை தியாகம் செய்திருந்தும்  நாம் இன்னொரு சுதந்திரமான காற்றை சுவாசிக்க முடியாத கட்டத்தில் இருக்கிறோம்!

தமிழ் மக்கள் பெற்ற துன்பங்களை சிங்கள மக்கள் அனுபவிக்க தொடங்கி விட்டனர். இதனால் அரசு அச்சத்தில் மூழ்கியுள்ளது. இதுவும் தமிழர்களுக்கான பாதை திறக்க வழியாகும். ஆகவே நாம் எல்லோரும் இணைந்து ஒருமிக்க வேண்டிய காலகட்டம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கடந்த 21 ந் திகதி தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து மன்னார் மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர் களினால் நேற்று வியாழக்கிழமை(24) மாலை வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது மன்னார் அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

மனிதர்களுடைய வாழ்விலே பிறப்பிலிருந்து இறப்பு வரை எவ்வளவோ நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறே தமிழர்களுடைய வாழ்வில் பல அடையாளங்களோடும் எதிர் பார்ப்புகளோடும் கடந்து சென்று கொண்டிருக்கின்றன.இந்த நேரத்தில் மன்னார் மக்களுடன் நான் உரையாடுவது எனது வரலாற்றில் ஒரு பதிவாகின்றது.என்னுடைய தெரிவுக்கு மன்னார் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு நன்றியுடன் அத்துடன் உங்களுடன் நம்பிக்கையுடன் பயணிக்க இருக்கிறேன்.

இந்த மண்ணிலே நாம் பல உயிர்களை தியாகம் செய்திருந்தும் நாம் இன்னொரு சுதந்திரமான காற்றை சுவாசிக்க முடியாத கட்டத்தில் இருக்கிறோம். நாம் இன்னும் அந்நியப்படுத்த பட்டிருக்கின்றோம்.

நாம் 75 ஆண்டுகளுக்கு மேலாக போராடி போராடி வரும் ஒரு இனமாக இருக்கின்றோம். 1949 ஆம் ஆண்டு தந்தை செல்வா கூறியது தமிழர் ஒரு தேசிய இனம். இழந்துபோன இறைமையை மீட்டு எடுத்து எமது தேசிய அடையாளத்தோடு வாழ வேண்டும் என செயல்பட ஆரம்பித்தார்.

தந்தை செல்வா மன்னார் மண்ணுக்கும் வந்து சென்றுள்ளார். அவருடைய காலத்தில் பலர் இந்த மண்ணில் எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இருந்துள்ளனர்.அவருடைய தேசிய சின்னத்துடன் இந்த மண்ணில் தேசிய மாநாடு இங்கு நடந்துள்ளது.

இவ்வாறு வரலாறு இப்பொழுதும் எமக்கு புதிய பணியை தந்துள்ளது.இது ஒரு தனி மனிதன் ஆற்றும் பணியல்ல. மாறாக நாம் யாவரும் ஒன்றிணைந்து ஒரு சக்தியாக தமிழர் என்று திரள்கின்ற பொழுது இந்த சமூகம் உலகம் எம்மை அங்கீகரிக்கின்ற நாள் நெருங்கிக் கொண்டு இருக்கின்றது என்ற நம்பிக்கை எம்மிடம் இருக்க வேண்டும்.

எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்குள் உலகம் முழுவதும் பாரிய மாற்றங்கள் இடம்பெற இருக்கின்றன. இன்று உலகத்தில் நிகழ்கின்ற சண்டைகள் அரசியல் நிகழ்வில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இலங்கை நாடும் இங்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று கண்ணை மூடிக் கொண்டு இருக்கிறார்கள். இலங்கை உலகத்தை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றது என உலகம் தெளிவாக புரிந்து கொண்டு இருக்கின்றது.

தமிழர்களின் தேசிய அபிலாசைகளை உலகம் புதிய பரிமாணத்துடன் சிந்திக்க முற்பட்டுள்ளது. நாம் இழந்த ஆத்மாக்கள் இப்பொழுது எமக்கு உத்வேகத்தை தருகிறது.நாம் எந்த நோக்கத்துக்காக எமது உறவுகளின் உயிர்களை இழந்தோ மோ அந்த நோக்கங்கள் இன்னும் அழிந்து போகவில்லை.சிங்கள மக்களுக்கு முன்பே நமது தமிழினம் இங்கு வாழ்ந்துள்ளது. நாம் இங்கு பல அடையாளங்களுடன் வாழ்ந்திருக்கிறோம்.

ஆகவேதான் இழந்த இறைமையை தான் நாம் மீண்டும் பெற போராடுகின்றோம். எமது மொழி , இடம் , கலை பண்பாட்டு இவைகள் எமது தமிழ் தேசிய அடையாளத்தை பற்றியுள்ளது.நாம் பல சவால்களை சந்தித்து இன்னும் மனிதர்களாக இருக்கிறோம் என்றால் நாம் அறத்தின் மீதும் தர்மத்தின் மீது பற்றுக் கொண்டவர்களாக இருக்கின்றோம்.இலங்கை அரசுக்கு ஒரு செய்தியை கூறுகின்றோம்.

தமிழர்களுக்கு வெளிச்சமான பாதை தொடங்கியுள்ளது. ஆகவே நாம் ஒருமித்த கரங்களாக இணைந்து கொள்வோம்.

நமக்கு இந்த நாடு நிம்மதியான அமைதியை தருமா? என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டு நிற்கின்றோம். இலங்கை அரசு தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்காவிடில் இந்த நாடு பெரும் பாதாளத்துக்குள் விழும் என்பது ஐயம் இல்லை.

நாம் பெற்ற துன்பங்களை சிங்கள மக்கள் அனுபவிக்க தொடங்கி விட்டனர். இதனால் அரசு பயத்தில் மூழ்கியுள்ளது. இதுவும் தமிழர்களுக்கான பாதை திறக்க வழியாகும். ஆகவே நாம் எல்லோரும் இணைந்து ஒருமிக்க வேண்டிய காலகட்டம் என இவ்வாறு தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments