மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்படும் சந்தர்ப்பத்தில் வீடுகளில் இருந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுவதை தவிர்த்துக் கொண்டு வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்று தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வரும் சந்தர்ப்பத்தில் உயிராபத்துகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே. கனகேஸ்வரன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோய் நிலவரம் தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை(9) மதியம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
-மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே. கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன்,பிரதேச செயலாளர்கள்,திணைக்கள தலைவர்கள், சுகாதார துறையினர்,பொலிஸார் பொது சுகாதார பரிசோதகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது மன்னார் மாவட்டத்தில் டெங்கு நிலைமை கட்டுப்பாட்டில் காணப்படுகின்றது. எனினும் மாவட்டத்தில் டெங்கு நிலவரம் தொடர்பாக விசேட கவனம் செலுத்தி வருகிறோம்.
கடந்த டிசம்பர் மாதம் மற்றும் ஜனவரி மாதத்தை ஏனைய மாதங்களுடன் ஒப்பிடும் போது மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளது. கூடுதல் அவதானம் செலுத்தும் வகையில் வீடு வீடாக சென்று பார்வையிட்டு டெங்கு நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும் சிரமதான பணிகளை முன்னெடுத்து வருகிறோம்.தொடர்ந்தும் சில தினங்களுக்கு மழை பெய்யும் என்பதால் விசேட கவனம் செலுத்தி வருகிறோம்.டெங்கு தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.சுகாதார துறையினருடன் பொலிஸ், ராணுவம்,கிராம அலுவலர்கள் இணைந்து டெங்கு தொடர்பாக விசேட பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பொதுமக்களுக்கு அவசர அறிவித்தல் விடுக்கின்றோம். டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ச்சியாக மருத்துவ பரிசோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு உற்படுத்தப்பட வேண்டும்.