சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வடமாகாண ரீதியாக இடம் பெற்ற திறன்சார் போட்டியில் அவதானிப்புக்களின் அடிப்படையிலும் செயற்பாட்டு ரீதியாகவும், பொறுப்புக்கூறல், தொழில் வாய்ப்பு உருவாக்கல் மற்றும் அறிக்கைப்படுத்தல் என அனைத்து விடயங்களிலும் சிறப்பாக செயற்பட்ட மன்னார் மாவட்ட மாற்றுத்திறனாளி அமைப்பான தேனீ அமைப்பு மாகாண ரீதியாக முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளது.
நேற்றைய தினம் யாழ்பாணத்தில் இடம் பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான நிகழ்வில் மன்னார் மாவட்ட மாற்றுத்திறனாளி அமைப்பினர் குறித்த விருதை சுவீகரித்து கொண்டதுடன் மாவட்ட தேனீ அமைப்பை சேர்ந்த இருவருக்கு விசேட விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
தேனீ அமைப்பு பதிவு செய்யப்பட்டு குறுகிய காலப்பகுதியில் அமைப்பின் அங்கத்தவர்களுக்கு பல்வேறு சுய தொழில் பயிற்சிகள் உட்பட பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்த நிலையிலும் நிதி பயன்பாடு மற்றும் கணக்கறிக்கைகள் சிறப்பாக பேணப்பட்டதன் அடிப்படையிலும் குறித்த போட்டியில் மாகாண ரீதியில் தேனீ அமைப்பினர் முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.