Wednesday, October 15, 2025
No menu items!
HomeMannar NewsMannar DS Newsஐ.நா சபையினுடைய கதவை தட்டியது மக்களினதும், போராளிகளினதும் தியாகம் என்பதை மறந்து விட முடியாது!

ஐ.நா சபையினுடைய கதவை தட்டியது மக்களினதும், போராளிகளினதும் தியாகம் என்பதை மறந்து விட முடியாது!

எமது இனத்தை அழித்தவர்கள், உறவுகளை காணாமல் ஆக்கியவர்கள், இனத்தை இல்லாது செய்கின்ற சிந்தனையுடன் உள்ளவர்கள் அதற்கு எதிரான விசாரனையை முன்னெடுக்க அருகதையற்றவர்கள் என்பதை நாங்கள் உணர்ந்தவர்களாக  இருக்கிறோம் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

செம்மணி உள்ளடங்களாக இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகளுக்கும், நடைபெற்ற இனப் படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி கோரி கையெழுத்துப் போராட்டம் தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (29) காலை மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் இடம் பெற்றது.

இதன் போது தலைமை தாங்கி உரை நிகழ்த்துகையில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஐ.நா சபையினுடைய கதவை தட்டியது மக்களினதும், போராளிகளினதும் தியாகம் என்பதை நாம் ஒரு ஒருபோதும் மறந்து விட முடியாது. இன்று வடக்கு கிழக்கில் எங்கு தோண்டினாலும் தமிழர்களுடைய மனித எலும்புக்கூடுகள் வெளி வருகிறது. வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களில் மனித புதைகுழிகள் காணப்படுகின்றது.

முதல் முறையாக மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டது மன்னாரிலே. அதனை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் மனித புதைகுழி கண்டு பிடிக்கப்பட்டது. தற்போது யாழ்ப்பாணத்தில் கூடுதலான மனித எலும்புக்கூடுகள் உள்ள மனித புதைகுழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தாயை தனது பிள்ளை கட்டிப்பிடித்துக் கொண்டு காணப்படுகின்ற எலும்புக்கூட்டு தொகுதியும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவ் மனித எலும்புக்கூடுகளை பார்க்கின்ற போது வேதனையை ஏற்படுத்துகிறது.

மனித உரிமை மீறல் சம்மந்தமாக செயல்பட்டவர்கள் தண்டிக்கும் வகையில் சர்வதேச நீதிமன்றத்தில் அவர்களுக்கு தண்டனை வழங்குகின்ற நிலைப்பாட்டை கொண்டு வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகின்ற வகையில் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

மன்னார் மறைமாவட்டத்தின் முன்னைநாள் ஆயர் அமரர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை ஏற்கனவே கூறியது  இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களின் உண்மை தொகையை ஐ.நா.சபை வரை சென்றுள்ளது.

இன்று வரை அவரது எண்ணிக்கையே அங்கும் உள்ளது. அவ்வாறான ஒரு சூழலில் ஆயர் அவர்கள் கூறிய வார்த்தை கள்ளர்கள் கள்ளர்களை விசாரணை செய்ய முடியாது என்றது போல எங்களுடைய இனத்தை அழித்தவர்கள், எமது உறவுகளை காணாமல் ஆக்கியவர்கள், இனத்தை இல்லாது செய்கின்ற சிந்தனையுடன் உள்ளவர்கள் அதற்கு எதிரான விசாரனையை முன்னெடுக்க அருகதையற்றவர்கள் என்பதை நாங்கள் உணர்ந்தவர்களாக இருக்கிறோம்.

இந்த கையெழுத்து வேட்டை ஐ.நா.வரைக்கும் சென்று எமக்கு நீதியாக மாற வேண்டும்.எம் உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த கையெழுத்து வேட்டையை ஆரம்பித்துள்ளோம்.வடக்கில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (29) குறித்த கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் பிரிதொரு தினத்தில் இடம் பெறும்.பல ஆயிரக்கணக்கான கையெழுத்துக்களை பெற்றுக் கொள்வதன் மூலம் எமது இலக்கை அடைய முடியும்.இதனூடாகவே எமது கோரிக்கையை சர்வதேசத்திற்கு தெரிவிக்க முடியும். என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த கையெழுத்து போராட்டத்தில் அருட் தந்தையர்கள், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள்,பொது மக்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டு கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments