மன்னார் மாவட்டத்தை மையமாக கொண்டு தமிழர் தாயக பகுதிகளில் பல்வேறு கல்வி விளையாட்டு மற்றும் சமூக சேவைகள் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் ஷாணு அறக்கட்டளையின் 10வது வருட பூர்த்தி நிகழ்வு மற்றும் DREAMERS UNITED SPORTS அக்கடமியின் அங்குரார்பண நிகழ்வும் அதன் தலைவர் ஜெயமன் தலைமையில் நேற்று மாலை மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம் பெற்றது.
வடக்கு, கிழக்கு தமிழர் தாயக பகுதிகளில் கல்வி மற்றும் விளையாட்டு துறைகளில் பின் தங்கியுள்ள கிராமங்கள், மற்றும் பாடசாலைகளை முன்னேற்றும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட ஷாணு அறக்கட்டளை இதுவரை 18800 மாணவர்களுக்கான கல்வி உதவி மற்றும் 170 பல்கலைகழக மாணவர்களுக்கான உதவி 670 பாடசாலை மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி உட்பட பல உதவிகளை மேற்கொண்டு வருகின்றது.
அதே நேரம் விளையாட்டு துறையில் மாகாண ரீதியாக பிரகாசிக்கும் மாணவர்களுக்கான நவீன விளையாட்டு உபகரணங்கள் உட்பட பயிற்சியாளர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்குதல் மைதானங்களை புணரமைத்தல் போன்ற செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றது.
அதே நேரம் சிறார்களுக்கான முன்பள்ளி அமைத்தல், வெள்ள நிவாரணம், இடர்கால கொடுப்பணவுகள் என சமூக சேவைகள் செயற்பாட்டிலும் ஈடுபட்டு வருகின்றது.
குறித்த நிறுவனத்தில் 10வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அதன் தொண்டர்களை கெளரவிக்கும் முகமாகவும் DREAMERS UNITED SPORTS
அக்கடமியின் அங்குரார்பணம் செய்யும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்ட குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் அவர்களும் கெளரவ விருந்தினர்களாக மேலதிக அரசாங்க அதிபர் M.பிரதீப் அவர்களும் மன்னார் வலயகல்வி பணிப்பாளர் K.செல்வன் அவர்களும் யாழ் போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் திரு.தனேந்திரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
குறித்த ஷாணு அறக்கட்டளையினால் யாழ்போதனா வைத்தியசாலையில் புற்றுநோய்சிகிச்சை பெறுபவர்களுக்கான நாள் சிகிச்சை மையம் ஒன்றும் அண்மையில் அமைக்கப்பட்டு தற்போது சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.