இந்திய மீனவர்களின் வருகையினால் அவர்கள் முன்னெடுக்கும் சட்டவிரோத மீன்பிடி முறைமையினால் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற விடையத்தை இந்தியா சென்ற ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பிரதமரிடம் பதிவு செய்துள்ளார்.
எனினும் குறித்த கருத்து எழுத்து மூலம் இல்லை என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.
மன்னாரில் இன்று வியாழன் (19) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
இலங்கை ஜனாதிபதிக்கு இந்திய அரசாங்கம் வழங்கிய கௌரவத்தை நாங்கள் மதிக்கிறோம். நாங்களும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்திய மக்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.அந்த மகிழ்ச்சிக்கு அப்பால் மாணவர்களாகிய நாங்கள் எதிர் பார்க்கின்ற விடையங்கள் என்ன நிறைவேற்றப்பட்டுள்ளது?,எதிர் காலத்தில் வட பகுதி மீனவர்களாக இருக்கட்டும்,தேசிய ரீதியில் இலங்கை மீனவர்களாக இருக்கட்டும், அவர்களின் வாழ்வாதாரம் எவ்வாறு இருக்கப்போகின்றது என்பது தொடர்பாக நாங்கள் கையாள இருக்கிறோம்.
இந்திய பிரதமருக்கும், இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் இடம் பெற்ற பேச்சுவார்த்தை, உடன்படிக்கையில் பல்வேறு விடையங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி குறித்து பல்வேறு விடையங்கள் கலந்துரையாட பட்டாலும்,மீனவர்கள் விடயம் தொடர்பாக நாங்கள் ஆராய வேண்டிய நிலை உள்ளது.
எனினும் ஜனாதிபதி உறுதியான கருத்தை அங்கு பதிவு செய்துள்ளார். இந்திய மீனவர்களின் வருகையினால் அவர்கள் முன்னெடுக்கும் சட்டவிரோத மீன்பிடி முறைமையினால் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற விடையத்தை பதிவு செய்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளின் வார்த்தைகளை விட அவரது கருத்து வேறுபட்டு இருந்தாலும் அது எழுத்து வடிவில் இல்லை.வெறும் கலந்துரையாடலாகவே அமைந்துள்ளது.என தெரிவித்தார்.
குறித்த ஊடக சந்திப்பில் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் மன்னார் மாவட்ட பிரதிநிதி அன்ரனி சங்கர், மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கத்தின் பிரதேச தலைவர் ஜே.யோகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.