Sunday, October 19, 2025
No menu items!
HomeMannar NewsMannar DS Newsமன்னார் மருத்துவமனை பொருட்களைச் சேதப்படுத்தியவர்களை கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!

மன்னார் மருத்துவமனை பொருட்களைச் சேதப்படுத்தியவர்களை கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!

மன்னார் மாவட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் மற்றும் ஏனைய கூட்டு அமைப்பினரும் இணைந்து  மன்னார்   மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எதிராக  நடந்துவரும் தற்போதைய முரண் நிலைகள் தொடர்பாக ஆராய்ந்து உள்ளோம்.

 மன்னார் மருத்துவமனை  சமூகத்தினருக்கு எதிரான சமூக ஊடகங்களில்  தேவையற்ற அவதூறான, இழிவான பதிவுகள் மற்றும் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மருத்துவமனை வட்டாரத்தினராகிய நாம் உளரீதியாக  பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளோம். இதற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.  

அத்துடன் மன்னார் மக்களுக்கு சேவையாற்ற உறுதியான, பொறுப்பான, பொறிமுறை அமைப்பாக இயங்கி இச் சிக்கல்களை சரி செய்வதற்கு நாங்கள் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலைக்குத்  தள்ளப்பட்டு இருந்தோம்.

அவை வருமாறு

1 எமது நடைமுறைச் சிக்கல்களை வடமாகாண ஆளுநர் மற்றும் சுகாதார அமைச்சர் உட்பட உயர் அதிகாரிகளுக்கு உத்தியோக பூர்வமாக தெளிவான விளக்கங்களாக வழங்கியுள்ளோம்.

2. மருத்துவமனை சார் நடைமுறை சிக்கல்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து அவர்களுக்கும் உறுதியாக எடுத் துரைத்துள்ளோம். அவர்களது உறுதியான பங்களிப்பையும் ஆதரவையும் எதிர்காலத்தில் எதிர்பார்த்து நிற்கின்றோம்.

** மதத் தலைவர்களைச் சந்தித்து நாம் சிக்கல்களை விளக்கியுள்ளோம். இதன் மூலம் மக்கள் விழிப்படைய வேண்டும் என்பதும் பொதுமக்களுக்கும் மன்னார் மாவட்ட மருத்துவ சமூகத்தினருக்கும் இடையிலே சுமூகமான புரிதல் ஒன்று கட்டி எழுப்பப்பட வேண்டும் என்பதையும் எதிர்பார்த்து நிற்கின்றோம்.

 இருந்தபோதிலும் ,இதுவரை நாம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு தகுந்த நடவடிக்கைகள்  எதுவும் எடுக்கப்படவில்லை. பொதுமக்கள் உணர்வு ரீதியாக செயல்படுகிறார்களே அன்றி  இந்த விடயத்தில்    ஆழ்ந்து சிந்திக்கத்தவறுகின்றமை எமக்கு மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. 

கடினமான சூழ்நிலைகளில் எல்லாம் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய எமது மருத்துவ சமூகத்தினர் இன்று சுமுகமாக பணியாற்ற முடியாத நிலையில் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இங்கு பணியாற்றும் அனைத்து மருத்துவர்களும் தங்கள் பணிக்கு அதிகரித்த பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வந்தவர்கள் என்பதை தெளிவாக குறிப்பிடுகின்றோம்.

 
இவர்களில் பெரும்பாலானோர் உள்ளகப் பயிற்சி முடிவடைந்த பின்னர் வழங்கப்படுகின்ற  முதல் நியமனத்தில் பணியாற்றுவதற்கு அவாவுடன் வந்தவர்கள்.

இதனால்  தமிழ் மொழி மூலமாக  பிரதேச மக்களுடன் தொடர்பாடல்கள்  சில காலம் வரை வரையறுக்க பட்டிருக்கும், மேலும் வரையறுக்கப்பட்ட  எண்ணிக்கையிலான பணியாளர்களுடன்,  தற்காலிக நியமனத்தில் சேவையாற்றுகின்ற,  மற்றும் வேறு வைத்திய சாலைகளில் கடமையாற்றுகின்ற,  சேவை தேவை நிமித்தம்  வருகை தருகின்ற மருத்துவ நிபுணர்களுடன் பணியாற்றி வருகின்றனர். 

மேற்கூறப்பட்ட விடயங்களை கருத்தில் கொண்டு எங்கள் பெரும்பாலான உறுப்பினர்களின் ஒருமித்த முடிவுகளுக்கு அமைவாக பின்வரும் நடவடிக்கைகளை எதிர்காலத்தில் எடுப்பதற்கு  நாங்கள் தீர்மானித்துள்ளோம்.
அவை வருமாறு

1) OPD குறிக்கப்பட்ட நேரங்களில் மாத்திரம் இயங்கும். 8am _12pm,2pm _4pm.

மதிய உணவு இடைவேளையில் (12:00- 2:00)     வெளி நோயாளர் பிரிவில் [O.P.D]   அவசர சிகிச்சை நோயாளர்களை   விடுதியில் அனுமதித்தல்  தவிர்ந்த     வழமையான சேவைகள் இடம்பெறமாட்டாது.

2) சிகிச்சை நேரம் காலை 8:00 மணி தொடக்கம் 12:00 மற்றும் பிற்பகல் 2:00 மணி தொடக்கம் 4:00 மணி வரை மட்டுமே அமையும். இது தவிர்ந்த நேரங்களில் அவசர நோயாளர்கள் மாத்திரம் பார்வையிட படுவர்.

3) மருத்துவமனையின் ஊழியர்களுடன் இணைந்து GMOA அமைப்பு அமைதியான போராட்டங்களில் எதிர்காலத்தில் ஈடுபடும்.

4) புதன்கிழமை காலை 8:00 முதல் அனைத்து வழக்கமான பணிகளையும் நிறுத்தி அவசர தேவைகளுக்கு மட்டுமே பணியாற்றுவோம்.

எங்களின் பின்வரும் கோரிக்கைகளுக்கு தகுந்த பதில் கிடைக்கும் வரை இது தொடரும்.

1. சீரான, திருப்தியான மருத்துவ சேவையினை  வழங்குவதற்கு ஒரு பாதுகாப்பான சூழல் உறுதி செய்யப்பட வேண்டும்.

2. அரசியல் மயப்படுத்தப்பட்ட, மக்கள் சேவை விரோத ,சட்டவிரோத செயற்பாடுகள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.மருத்துவமனை பொருட்களைச் சேதப்படுத்தியவர்கள் அடையாளம் கண்டு கைது செய்து அவர்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுவதோடு ,பழுதுகளை சரி செய்வதற்கான செலவினத்தையும் அவர்களே பொறுப்பேற்றல் வேண்டும்.

4. வைத்தியசாலை வளாகத்தி உள்ளும், சிகிச்சை வழங்கும் இடங்களிலும் நோயாளர்களையும், சேவை வழங்குனர்களையும் அனுமதியின்றி படம் எடுத்தல் முற்றாக தடை செய்யப்பட வேண்டும் என்பதுடன், இதை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

5. மருத்துவ சேவை தொடர்பான புகார்கள் மருத்துவமனை நிர்வாகத்தின் ஊடாக அல்லது, பிராந்தியம், மாகாணமட்ட மேலதிகாரிகளுக்கு  ஊடாக தெரியப்படுத்தப்பட வேண்டும் என்பது இறுக்கமாக வலியுறுத்தப்படுவதுடன், சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தப்படும் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

மருத்துவமனையில் இருந்து பயன்பெறுகின்ற மக்களின் தவறான புரிதல்களை சரி செய்ய உயர் அதிகாரிகள், மற்றும் சமூகத் தலைவர்களது செய்திக் குறிப்புக்கள் ஊடகங்களில் காலதாமதம் இன்றி வெளியிடப்பட வேண்டும்.

இறுதியாக நாம் கூற விளைவது யாதெனில்  

மன்னார் மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலனில் பெரிதும் அக்கறை கொண்டவர்கள் நாம்.  ஆனால் எதிர்பாராத சில சந்தர்ப்பங்களில் பொதுமக்களும், சமூக ஊடகங்களும் பொறுப்பற்ற விதத்தில் உணர்வு ரீதியாகவும் செயல்பட விளைவதால் நாம் பெரிதும் இன்னலுக்கு ஆளாகி உள்ளோம். 

எத்தனையோ உயிர்களை இதுவரை காலமும் காப்பாற்றிய மருத்துவமனை மீது தாங்கள் நடந்து கொண்ட விதம் பெரிதும் வேதனை அளிப்பதோடு பொதுமக்கள் இவ்விடங்களில் விழிப்படைய வேண்டும்.

எமது எதிர்கால நோக்கமும் எமது ஊடக அறிக்கைக்கான பிரதான காரணமும் என்பதைப் பொதுமக்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

செயலாளர் ,
GMOA  கிளை ஒன்றியம் ,
மன்னார் மாவட்டம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments