Wednesday, October 15, 2025
No menu items!
HomeMannar NewsMannar DS Newsசந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள விடத்தல் தீவு கண்டல் தாவர காணிகள் விடுவிப்பு!

சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள விடத்தல் தீவு கண்டல் தாவர காணிகள் விடுவிப்பு!

வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் அமைச்சர் பவித்திரா தேவி வன்னியாரச்சிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்கு அமைய   மன்னார் மாவட்டம் விடத்தல் தீவு இயற்கை சரணாலயம் என குறிபிடப்பட்ட பகுதி நிறைவுக்கு வருவதாக கடந்த மாதம் 6 ஆம் திகதி  விசேட வர்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

இவ்வாறு விடத்தல் தீவு பகுதியில் வனவள திணைக்களத்திற்கு சொந்தமான காணிகள்  கடல் சார் பூங்கா/கடல் வேளண்மைக்கு  விடுவிக்கப்படுவதாக வர்தமானி அறிவிப்பின் ஊடாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த காணி விடுவிப்பு தொடர்பில் பல்வேறு சர்சைகள் எழுந்துள்ளது.

குறிப்பாக கடந்த வாரம் இடம் பெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது குறித்த காணிவிடுவிக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு வாத பிரதிவாதங்கள் இடம் பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில் அபிவிருத்தி என்ற பெயரில் இயற்கையான கண்டல் காடுகளை அழித்து மீன்பிடி நடவடிக்கைகளை தடுத்து அமைக்கப்படும் கடல் சார் பூங்காவிற்கு அனுமதி வழங்க முடியாது என தெரிவித்திருந்தார்.

அதே நேரம் மீனவர்கள் சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்ட போது இந்த 400 ஏக்கர் நிலமும் ஒரு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு பண்ணை அமைப்பதற்கு வழங்குவதற்காகவே விடுவிக்கப்பட்டதாக சந்தேகம் மீனவர்கள் மத்தியில் காணப்படுவதாக தெரிவித்தனர்.

வெறுமனே இதை 400 ஏக்கர் பிரச்சினையாக கருத கூடாது எனவும் இதை தொடர்ந்து விடத்தல் தீவு பகுதியோடு சேர்ந்த 1400 ஏக்கர் காணிகள் ஆபத்தில் இருப்பதாக வடமாகண மீனவ சமாச ஊடக பேச்சாளர் ஆலம் குறிப்பிட்டிருந்தார்.

அதே நேரம் குறித்த காணி விடுவிக்கப்பட்டமனை தொடர்பில் தங்களுக்கு எந்த ஒரு அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை எனவும் 1000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு தொடர்பில் அளவீடுகள் இடம் பெற்ற நிலையில் 400 ஏக்கராக குறைக்கப்பட்டு தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் தெரிவித்திருந்தார்.

அதே நேரம் மன்னார் மாவட்ட காணிகளுக்கு பொறுப்பான மேலதிக அரசாங்க அதிபர் இது தொடர்பில் தெரிவித்த போது குறித்த வர்தமானி அறிவித்தல் வெளியானதை தொடர்ந்து மன்னார் வனவள திணைக்கள அதிகாரிகளிடமும் கொழும்பு மாவட்ட உயர் அதிகாரிகளிடமும் அறிய முற்பட்ட வேளை குறித்த அறிவித்தல் தொடர்பில் அவர்களுக்கே தெரியாத நிலையே காணப்பட்டதாக தெரிவித்தார் மேலும் குறித்த வர்தமானி அறிவித்தல் சிங்கள மொழியிலே காணப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்ட இணைப்புகள் எதுவும் வர்தமானியில் காணப்படவில்லை எனவும் அதில் ஒழுங்கான விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை எனவும் அவ் வர்தமானி தொடர்பில் யாருக்கும் ஒழுங்கான விளக்கம் இல்லை என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த விடுவிக்கப்பட்ட காணிகளை வேறு எந்த உள்ளூர்  நிறுவனங்களுக்கோ அல்லது வெளிநாட்டு நிறுவனங்களுக்கோ வழங்காது அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு மட்டுமே வழங்கவேண்டும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்  தீர்மாணிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்றைய தினம் யாழ் வடமாராட்சி ஊடக இல்லத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் “விடத்தல் தீவு விடுவிக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு பயன்படுத்துவதாக கடற்றொழில் அமைச்சால் தெரிவிக்கப்படுகின்றது எங்களை பொறுத்த வரையில் விடத்தல் தீவு என்பது கடலால் சூழப்பட்ட பிரதேசம் அது பூகோல ரீதியில் பெறுமதியான பிரதேசம் பருவ காலத்திலே மீன் இனங்கள் அந்த பிரதேசத்திலேயே இனப்பெருக்கம் செய்து ஆல்கடலுக்கு செல்கின்றன இலங்கையின் மிகப்பெரிய மீன் உற்பத்தி வங்கி அதாவது இந்த திணைக்களங்களினால் அறியப்படாத மீன் உற்பத்தி வங்கியும் இதை எமது மக்களின் வாழ்வாதாரத்துக்கும் அபிவிருத்திக்கும் பயன்படுத்துவதாக கூறி மிக பலம் பொருந்திய பல்தேசிய கம்பணிகளுக்கு மக்கள் என்ற போர்வையிலே மக்களை பினாமியாக வைத்து விற்பனை செய்வதற்கான மறைமுகமான திட்டமாகத்தான் இது இருப்பதாக அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராச தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த காணிவிடுவிப்பு தொடர்பில் தெளிவுபட்டுத்தப்பட்ட வர்தமானி அறிவித்தல் சம்மந்தப்பட்ட அமைச்சாலோ அமைச்சராலோ வழங்கப்படாத நிலையில் குறித்த காணிகளை விடுவிக்க வேண்டாம் எனவும் அவை பாதுகாக்கப்படவேண்டும் எனவும் கோரி விரைவில் விடத்தல் தீவு மக்களால் போராட்டம் ஒன்று இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments