Wednesday, October 15, 2025
No menu items!
HomeMannar Newsஇந்திய கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள 5 மீனவர்களையும் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை முன்னெடுக்கப்பட...

இந்திய கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள 5 மீனவர்களையும் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்!

இந்திய கடற்பரப்பில் நுழைந்த நிலையில் கைது செய்யப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ள 5 மீனவர்களையும் நாட்டிற்கு  அழைத்து வர கடற்றொழில் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை எவ்வித முனைப்பு காட்டவில்லை என  வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று திங்கட்கிழமை(6) காலை மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
இந்திய கடற்பரப்பில் நுழைந்த நிலையில் கைது செய்யப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ள 5 மீனவர்களின் நிலை தொடர்பாக இவ் ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தலைமன்னாரில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற 05 கடற்தொழிலாளர்கள் தமிழக கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு,வழக்கு விசாரனைகள் இடம் பெற்று வந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப் படாத நிலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.மீன்பிடியில் ஈடுபட்ட போது கடலில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக அவர்களின் படகு அங்கு ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மீனவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்ட காலம் முதல் அவர்கள் விடுவிக்கப்பட்ட காலம் வரை சுமார் 6 மாதங்கள் அவர்கள் தொடர்பான எவ்வித நடவடிக்கைகளையும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும், மற்றும் கடற்றொழில் அமைச்சர் வரும் அக்கறை செலுத்தியதாக தெரியவில்லை.

தமிழக மீனவர் ஒருவர் இலங்கையில் கைது செய்யப்பட்டிருந்தால் அல்லது பாதிக்கப்பட்டிருந்தால் தமிழகத்தில் இடம் பெறுகின்ற போராட்டங்களும், தமிழக அரசு மற்றும் அங்குள்ள இந்திய துணை தூதரகங்கள் காட்டுகின்ற முனைப்பு எமது மீனவர்களுக்கு இவ்வாறான நிலை ஏற்படுகின்ற போது இங்குள்ள அரசியல் பிரதிநிதிகளால் எவ்வித முனைப்புக்கள் காட்டப்படுவதில்லை.

குறித்த 5 மீனவர்களும் விடுவிக்கப்பட்டு இன்று இந்தியாவில் உள்ள எம்மோர் என அழைக்கப்படும் புத்த கோவில் பகுதியில் இலங்கை துணைத் தூதரகத்தினால் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் அவர்களை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. இவர்களில் மூவர் திருமணம் செய்தவர்கள் இருவர் திருமணம் முடிக்காதவர்கள் அடங்குகின்றனர். அவர்களின் குடும்பங்கள் இங்கு பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

அவர்களின் குடும்பங்களை சந்தித்து அவர்களின் தற்போதைய நிலையை எவரும் கேட்டறிந்தாதாக தெரியவில்லை. வடபகுதியில் உள்ள ஒவ்வொரு மீனவரின் நிலையும் இவ்வாறே அமைந்துள்ளது.

யாருமே அவர்கள் மீது அக்கறை செலுத்துவதில்லை. எனவே தற்போது அங்குள்ள மீனவர்களின் நிலையை கருத்தில் கொண்டு, கடற்றொழில் அமைச்சர் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் துரித நடவடிக்கையை முன்னெடுத்து அவர்கள் 5 பேரையும் உடனடியாக நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments